தத்துவம்

சூனியதம்

சித்தார்த்தா, கௌதமா, சாக்கியமுனி, ததாகதா, புத்தர் உள்ளிட்ட பல பெயர்கள் கொண்ட பௌத்த மதத்தின் தோற்றுனர் வட இந்தியாவில் வாழ்ந்து பௌத்த தத்துவத்தைப் போதித்தவர். பௌத்த தத்துவத்தின் மையக் கருத்தாக்கம் சூனியதம் எனப்படும். இதன் பொருள் என்ன?

பௌத்த சூத்திரங்களில் மிக முக்கியமான ஒன்று சமஸ்கிருதத்தில் ‘பிரக்ஞாபரமிதா இருதய சூத்திரம்’ எனப்படும். சுருக்கமாக ‘இதய சூத்திரம்’ என்றும் அழைக்கப்படும். இதில் ‘ரூபம் சூனியதம், சூனியதமே ரூபம்’ என்று ஒரு மிகப் பிரபலமான அறிவிப்பு இடம்பெறுகிறது. 

இங்கு ‘ரூபம்’ என்ற சொல் அகிலத்தில் இடம்பெறும் எவ்வகையான உருவத்தையும் குறிப்பிடுகிறது. மரம், கல், மனிதன், விலங்கு போன்ற மெய்பொருட்களும், நாடு, அரசு, சட்டம், நேரம் போன்ற புலனாகாதப் பொருட்களும் இதில் உட்படும். இதய சூத்திரத்தில் மேலும் வரும் வரிகளில், எல்லாத் தர்மங்களும் சூனியதத்தின் இலட்சணம் கொண்டவை என்று கூறுகிறது. இங்கு ‘தர்மம்' என்ற சொல் முன் விளக்கிய ‘ரூபம்’ என்ற சொல்லின் பொருளே கொண்டது.

சூனியதத்தின் பொருளை விளக்க உருவங்களுக்கும் சொற்களுக்கும் இருக்கும் தொடர்பை ஆய்வு செய்தால் உதவும். ஒரு சொல்லை அகராதியில் தேடிப் பார்த்தால், அதன் பொருள் அதே சொல்லைத் தவிர வேறு சொற்களால் மட்டுமே விளக்கியிருக்கும். இதே வகையில், ஒரு உருவத்தை ஆய்வு செய்தால், அந்த உருவம் அதனைத் தவிர வேறு உருவங்களால் மட்டுமே உண்டாகியிருப்பது தெளிவாகும்.

ஒரு மரம் சூரிய ஒளி, மண், நீர், காற்று உள்ளிட்ட பொருட்களால் தான் உண்டாகிறது. அதாவது, ஒரு மரம், ‘மரம்’ என்ற பொருளைத் தவிர வேறு பொருட்களால் மட்டுமே உண்டாகிறது. அதனால் ஒரு மரத்திற்குத் தனிப்பட்ட இயல்பு கிடையாது. இதே போல், ‘நாடு’ என்ற உருவம் நிலம், மனிதர்கள், மரங்கள், விலங்குகள், கட்டடங்கள், அரசு, சட்டம், காவல் துறை உள்ளிட்ட ‘நாடை’ தவிர வேறு பல பொருட்களால் மட்டுமே உண்டாகிறது. அதனால் ‘நாடு’ என்ற உருவத்திற்குத் தனிப்பட்ட இயல்பு கிடையாது.

இந்தத் தனிப்பட்ட இயல்பை சமஸ்கிருதத்தில் சுவபாவம் என்று குறிப்பிடுவர். அகிலத்தில் எந்த உருவத்திற்கும் சுவபாவம் கிடையாது என்ற தத்துவத்தைத்தான் சூனியதம் என்ற கருத்தாக்கம் குறிக்கிறது. சூனியதத்தின் பொருள் ‘இல்லாமை’ என்றும் கூறலாம். ஒரு உருவத்திற்கு சுவபாவம் இல்லை என்று கூறுவது அந்த உருவமே இல்லை என்று கூறுவதற்கு சமம் ஆகாது. ‘இல்லாமை’ எப்பொழுதும் ஏதோ ஒரு குறிப்பிட்ட பொருளின் இல்லாமையாகத்தான் திகழும். அந்த உருவம் இருக்கிறது, ஆனால் அதற்கு சுவபாவம் மட்டும் இல்லை.

எளிமையாகத் தோன்றும் இந்தத் தத்துவக் குறிப்பு உண்மையில் அதன் முழுமையான பொருந்துதலால் மிக ஆழ்ந்த விளைவுகள் கொண்டது. ஒரு நேரடி விளைவு என்னவென்றால், ‘முதல் காரணம்’ என்று எதுவும் கிடையாது. அதாவது, அகிலத்தின் படைத்தல் போன்ற ஒரு முதல் நிகழ்வோ, அல்ல அணு போண்ற ஒரு மூல மெய்பொருளோ எதுவும் கிடையாது. ஒவ்வொரு காரணமும் ஒரு விளைவாகவும்தான் திகழும். ஒவ்வொரு விளைவும் ஒரு காரணமாகவும் திகழும்.

மூல மெய்பொருள் எதுவும் இல்லையென்பதால் ஒரு பொருளைப் படைத்தல் என்ற செயல் எப்பொழுதும் வேறு குறிபிட்டப் பொருட்களை ஒன்றோடு ஒன்று சார்ந்து அமைத்தலால் மட்டுமே இயங்கும். இவ்வாறு உருவங்கள் ஒன்றோடு ஒன்று சார்ந்து உண்டாகுவதை சமஸ்கிருதத்தில் ‘பிரதித்யசமுத்பாதம்’ என்று கூறுவர்.

சூனியதத்தைச் சிலர் ‘ஒற்றுமை’ என்ற கருத்தாக்கத்துடன் தவறாக ஒப்பீடுவர். எந்த பொருளுக்கும் சுவபாவம் இல்லை என்பது எல்லாப் பொருட்களும் ஒரே தன்மை கொண்டவை என்பதற்கு சமம் ஆகாது. ஒற்றுமை என்ற கருத்தாக்கம், வேற்றுமை என்ற கருத்தாக்கம் இன்றி திகழ முடியாது. அதே போல், வேற்றுமை என்ற கருத்தாக்கம், ஒற்றுமை என்ற கருத்தாக்கம் இன்றி திகழ முடியாது. ஒற்றுமையும் வேற்றுமையும் ஒன்றோடு ஒன்று சார்ந்துதான் உருவாகின்றன. இதே போல், நன்மை-தீமை, இருத்தல்-இல்லாதல், பிறப்பு-இறப்பு, புனிதம்-நிந்தனம் போன்ற பல எதிர்மறை ஜோடிகள் ஒன்றோடு ஒன்று சார்ந்து உருவாகின்றன.

சூனியதத்தின் அடையாளத்தை நாம் மனித உடலிலும் உணரலாம். நமது முகத்தில் இருக்கும் மூக்கை நம்மால் தொடலாம், உணரலாம், கண்ணாடியிலும் பார்க்கலாம். ஆனால், நமது உடலின் உள்ளுணர்வில் நம் மூக்கிற்கு ‘இல்லாமை’ எனப்படக்கூடிய ஒரு பண்பையும் உணரலாம். இந்த ‘இல்லாமை’ பண்பு எதனால் தோன்றுகிறது? முகத்தில் மூக்கு இருக்கிறது, ஆனால் அதற்குச் சுவபாவம் மட்டும் இல்லை.

இருப்பின் மூன்று அடையாளங்கள் என்று புத்தர் பாளி மொழியில் கூறியவை ‘அனாத்தா’, ‘அனிச்சா’ மற்றும் ‘துக்கா’. இதில் ‘அனாத்தா’ (சமஸ்கிருதம்: அனாத்மா) சூனியதத்தை குறிக்கிறது. ‘அனிச்சா’ (சமஸ்கிருதம்: அனித்யா) பொருட்களின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. ‘துக்கா’ துன்பத்தைக் குறிக்கிறது.

சூனியதம் பன்முகத்தன்மை கொண்ட ஒரு தத்துவம். உருவங்களின் இருப்பை குறிக்கும் கருத்தாக இதுவரை அதை விளக்கியிருக்கிறோம். இதைத் தாண்டி, மனித வாழ்க்கையிலும் சூனியதம் பல விளைவுகள் கொண்டது. துன்பம் எப்படி உருவாகிறது, கருணையை எப்படி வெளிபடுத்துவது போன்ற வாழ்முறை கேள்விகளுக்கும் சூனியதம் ஒரு வழிகாட்டும் கொள்கையாகப் பயன்படும்.